சிறப்பு டிஜிபி மீதான வழக்கு விசாரணை 8 வாரத்தில் முடிக்கப்படும்- சிபிசிஐடி உத்தரவாதம்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை:

தமிழக சட்டம்- ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி., பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக தமிழக டி.ஜி.பி. திரிபாதியிடம் அந்த பெண் எஸ்.பி. புகார் அளித்தார்.

இதையடுத்து, சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணங்களை மூடி முத்திரையிட்ட உறையில் காவல்துறை தாக்கல் செய்து இருந்தது.

இந்த வழக்கை ஐகோர்ட்டு நேரடியாக கண்காணிக்கும் என்றும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சி.பி.சி.ஐ.டி. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.

மேலும், விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? எனவும் கேள்வி எழுப்பினார். சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுவரை 87 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சிறப்பு டி.ஜி.பி.யின் மொபைல் போன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆய்வு அறிக்கைக்கு காத்து இருப்பதாகவும் விளக்கமளித்தார். மேலும், 8 வாரத்திற்குள் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதி, விசாரணையை விரைந்து முடிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 13-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com