கோவையில் பெண் இன்ஸ்பெக்டரின் கணவரை தாக்கி கார் கடத்தல்- போலீசார் விசாரணை

கோவையில் இன்று காலை பெண் இன்ஸ்பெக்டரின் கணவரை தாக்கி கார் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை
Published on

கோவை:

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் வின்சென்ட்குமார் (வயது 36). வீடு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவரது மனைவி சஜின் ஈரோடு மாவட்டம் போக்குவரத்து பிரிவில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். வின்சென்ட்குமார் தனது மனைவி சஜினை கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் விடுவதற்காக இன்று காலை பாலக்காட்டில் இருந்து தனது காரில் அழைத்து வந்தார். பின்னர் அவரை அங்கு விட்ட பிறகு மீண்டும் பாலக்காட்டிற்கு காரில் புறப்பட்டார்.

கார் காலை 8 மணிக்கு மதுக்கரை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட கோவை- பாலக்காடு ரோடு மரப்பாலம் அருகே சென்ற போது அந்த வழியாக மற்றொரு காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வின்சென்ட் குமாரின் காரை வழிமறித்து நிறுத்தினர்.

பின்னர் அந்த காரில் இருந்து உருட்டு கட்டையுடன் இறங்கிய அவர்கள் காரின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதில் அதிர்ச்சியடைந்த வின்சென்ட் குமார் சத்தம் போட்டார். உடனடியாக அந்த கும்பல் அவரை கத்தி முனையில் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். பின்னர் வின்சென்ட்குமாரை தாக்கி மிரட்டி, அவரை காரில் இருந்து இறக்கி விட்டு அந்த காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com