கம்பத்தில் வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்த கார் டிரைவர்

கம்பத்தில் வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கார் டிரைவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் டிரைவர் கார்த்திக்.
கார் டிரைவர் கார்த்திக்.
Published on

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). கார் டிரைவர். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு கோகுலேஷ் (4) என்ற மகன் உள்ளான். கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஈஸ்வரி மகனை அழைத்துக்கொண்டு கூடலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இதனால் வீட்டில் கார்த்திக் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திக்கை தேடி அவரது நண்பர்கள் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவருடைய உடல் அருகே கண்ணாடி துண்டுகள் கிடந்தன. இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த தடயங்கள் மற்றும் கண்ணாடி துண்டுகளை சேகரித்தனர்.

பின்னர் அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கண்ணாடியால் கழுத்தை அறுத்து கார்த்திக் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com