சங்கரன்கோவில் அருகே கார்- மொபட் மோதல்: பெண் பலி

சங்கரன்கோவில் அருகே காரும், மொபட்டும் மோதிய விபத்தில் பெண் பலியானார். படுகாயம் அடைந்த அவருடைய கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சாந்தி
சாந்தி
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 55). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி (47). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவில் பரமசிவம் சங்கரன்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் உறவினரை பார்ப்பதற்காக தன்னுடைய மனைவியுடன் மொபட்டில் புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே பெரும்பத்தூரைச் சேர்ந்த குருநாதன் என்பவர் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக காரில் ஏற்றி சங்கரன்கோவில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அந்த காரை பெரும்பத்தூரைச் சேர்ந்த கணேசன் ஓட்டிச் சென்றார்.

சங்கரன்கோவில் அருகே புளியம்பட்டி அருகில் சென்றபோது, பரமசிவம் ஓட்டிச் சென்ற மொபட் மீது, கார் பயங்கரமாக மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட பரமசிவம், சாந்தி ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த பரமசிவத்தை நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com