திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதல்- தம்பதி உள்பட 4 பேர் பலி

திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலியான இந்துமதி, செந்தில்நாதன், முகிலன், குருநாதன்.
பலியான இந்துமதி, செந்தில்நாதன், முகிலன், குருநாதன்.
Published on

திண்டிவனம்:

சென்னை மேடவாக்கம் விமலா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன்(வயது 49). சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடைய மனைவி இந்துமதி(41), இவர் சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில், வேளாண்மை அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களது மகன் முகிலன்(16).

இந்தநிலையில் செந்தில்நாதன் தனது குடும்பத்துடன் கள்ளக்குறிச்சியில் நடந்த உறவினர் திருமண விழாவுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று காலை செந்தில்நாதன், இந்துமதி, முகிலன், செந்தில்நாதனின் அண்ணன் ஐ.சி.எப்.பில் பணிபுரிந்து வந்த கொளத்தூர் லட்சுமி நகரை சேர்ந்த குருநாதன்(54) ஆகியோர் ஒரு காரில் கள்ளக்குறிச்சிக்கு சென்றனர்.

பின்னர் விழா முடிந்ததும் அவர்கள் கள்ளக்குறிச்சியில் இருந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டனர். காரை செந்தில்நாதன் ஓட்டிச் சென்றார். அந்த கார், திண்டிவனம்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

மதியம் 12.30 மணியளவில் திண்டிவனம் அடுத்த பாதிரி என்ற இடத்தில் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கண்இமைக்கும் நேரத்தில் சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் செந்தில்நாதன், இந்துமதி, முகிலன், உறவினர் குருநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com