பெருந்துறையில் தம்பி இறந்த துயரத்தால் அண்ணன் தற்கொலை

பெருந்துறையில் தம்பி இறந்த துயரத்தால் அண்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

பெருந்துறை:

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 41). இவர் தனது குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மேக்கூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். ஜெயக்குமார் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

அவருடைய தம்பி ராஜேஸ்குமார் (39). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தனது அண்ணனுடன் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்குமார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

உடன் பிறந்த தம்பியை காப்பாற்ற முடியவில்லையே என ஜெயக்குமார் மன வேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், கடந்த 23-ந்தேதி காலை வீட்டில் இருந்தபோது விஷம் குடித்தார்.

இதைப்பார்த்த அவருடைய மனைவி பவித்ரா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜெயக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் நேற்று மதியம் இறந்தார்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com