

குனியமுத்தூர்:
கோவை போத்தனூரை சேர்ந்த 18 வயது இளம்பெண். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இன்று திருமணம் செய்வது என அவரது பெற்றோர் நிச்சயம் செய்து இருந்தனர். அதன்படி இளம் பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
நேற்று காலை வீட்டில் இருந்த இளம்பெண் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாக அவர் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் உறவினர் வீட்டுக்கு சென்று தேடி பார்த்தனர்.
ஆனால் அவர் அங்கு இல்லை. இதனையடுத்து மணப்பெண்ணை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அவர் வீட்டில் இருந்த கல்வி மாற்று சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
இளம்பெண்ணின் பெற்றோர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
இது குறித்து மணப்பெண்ணின் பெற்றோர் போத்தனூர் போலீசில் மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து மாயமான மணப்பெண்ணை தேடி வந்தனர். பின்னர் அவரது செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது மணப்பெண் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லையென்றும் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தோழி வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் இளம்பெண்ணின் பெற்றோருடன் பொள்ளாச்சிக்கு சென்று அவரை மீட்டனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து சமாதானம் செய்து அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். திருமணத்தில் விருப்பம் இல்லாததால் மணப்பெண் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததால் இன்று நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.