ஓட்டப்பிடாரம் அருகே கொத்தனார் அடித்துக் கொலை- ஜாமீனில் வந்த தொழிலாளி வெறிச்செயல்

ஓட்டப்பிடாரம் அருகே கொத்தனார் அடித்துக் கொலை செய்யப்பட்டார். ஜாமீனில் வந்த தொழிலாளி இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.
கொலை
கொலை
Published on

ஓட்டப்பிடாரம்:

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள மேல பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 40) கொத்தனார். இவரது மனைவிக்கும், பக்கத்து ஊரான மும்மலைப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்துமாரியப்பன் (37) என்பவருக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஹரிகிருஷ்ணன், தனது மனைவி, முத்துமாரியப்பன் ஆகியோரை கண்டித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு ஹரிகிருஷ்ணனின் தந்தை அண்ணாதுரை, முத்துமாரியப்பனை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த முத்துமாரியப்பன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அண்ணாதுரையை கொலை செய்தார். போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில் கொலை வழக்கில் இருந்து முத்துமாரியப்பன் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பின்னர் அவர், ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு ஆவரங்காடு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலையில் ஹரிகிருஷ்ணன், முத்துமாரியப்பனை தேடி வடக்கு ஆவரங்காடு கிராமத்திற்கு சென்றார்.

அப்போது அவர் தனது தந்தை கொலை தொடர்பாக தட்டிக் கேட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துமாரியப்பன் அருகில் கிடந்த மண்வெட்டியால் ஹரிகிருஷ்ணனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஹரிகிருஷ்ணனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அறிந்த ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஹரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தை மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய முத்துமாரியப்பனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓட்டப்பிடாரம் அருகே கொத்தனார் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com