

திருச்சி:
திருச்சி ஜெயில்பேட்டை குடிசைமாற்று வாரிய காலனி குடியிருப்பை சேர்ந்தவர் மலர்மன்னன். இவருடைய மனைவி தெய்வவள்ளி (வயது 44). இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் தனியார் பள்ளி விடுதியில் தங்கி எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். தெய்வவள்ளி அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் சமைத்து வைத்துவிட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார்.
வீட்டில் அவரது குழந்தைகள் மட்டும் இருந்தனர். தெய்வவள்ளியின் 2-வது மகன் பிரபாகரன் (10). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா தாக்கம் காரணமாக இன்னும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், பிரபாகரன் தினமும் அக்கம்பக்கத்து சிறுவர்களுடன் விளையாடுவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை சிறுவன் பிரபாகரன் வீட்டினுள் உள்ள ஜன்னல் கம்பியில் தனது அக்காளின் துப்பட்டாவை கட்டி அதில் அமர்ந்து ஊஞ்சல் ஆடி கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாரதவிதமாக துப்பட்டா கழுத்தை சுற்றி இறுக்கியது. இதில் சிறுவன் உயிருக்கு போராடினான். அந்தசமயம் அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் சிறுவனை காப்பாற்ற யாரும் வரவில்லை. சிறிதுநேரத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். வேலை முடிந்து வீடு திரும்பிய தெய்வவள்ளி மகன் ஊஞ்சலில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். தகவல் அறிந்த காந்திமார்க்கெட் போலீசார் அங்கு சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் ஊஞ்சல் ஆடி கொண்டிருந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.