கோப்புபடம்
கோப்புபடம்

துவரங்குறிச்சியில் பெண் வியாபாரி கொலை வழக்கில் சிறுவன் கைது - பரபரப்பு வாக்குமூலம்

துவரங்குறிச்சியில் பெண் வியாபாரி கொலை வழக்கில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். அவன் போலீசில் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published on

துவரங்குறிச்சி:

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் ஹபீபா பீவி (வயது 67). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனிமையில் வசித்து வந்ததோடு ஜவுளி வியாபாரம் பார்த்து பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 1-ந்தேதி அதிகாலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டதுடன், அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையும் கொள்ளை போனது. இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கொலையாளியை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, ஒரு சிறுவன் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து துவரங்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்த அந்த சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவன், சந்தைப்பேட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும், அவன்தான் இந்த கொலையை செய்ததையும் ஒப்புக் கொண்டான். மேலும் சிறுவன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தான்.

அதில், நான் சந்தைப்பேட்டை பகுதியில் வசித்து வருகிறேன். நான் மூதாட்டியின் வீட்டை கடந்து செல்லும் போது பல முறை அவர் என்னை திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கடந்த 31-ந் தேதி மூதாட்டி தூங்குவதற்கு முன் அவரது வீட்டு கதவு திறந்து கிடந்தது. உடனே நான் வீட்டிற்குள் சென்று கயிற்றால் கழுத்தை இறுக்கி கல்லால் தாக்கி கொலை செய்தேன். பின்னர் அந்த மூதாட்டியிடம் உல்லாசம் அனுபவித்து விட்ட பின்னர் நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டேன் என்று தெரிவித்துள்ளான்.

சிறுவனின் தந்தையும் குற்றசம்பவத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு உரிய வழிகாட்ட ஆள் இல்லை. படிக்கவும் வழியில்லை. இதனால் மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com