பீகார் சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ விஜய் சின்கா தேர்வு

பீகாரில் எதிர்க்கட்சியின் கடும் அமளிக்கு மத்தியில் நடந்த வாக்கெடுப்பில், பாஜகவைச் சேர்ந்த விஜய் சின்கா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜய் சின்கா
சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜய் சின்கா
Published on

பாட்னா:

பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலை இடைக்கால சபாநாயகர் ஜித்தன் ராம் மஞ்சி நடத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜகவைச்  சேர்ந்த விஜய் குமார் சின்காவும், மெகா கூட்டணி சார்பில் அவாத் பிகாரி சவுத்ரியும் போட்டியிட்டனர். 

வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலவை உறுப்பினர்கள் அவையில் இருந்ததை காரணம் காட்டி, குரல் வாக்கெடுப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு அவையைச் சேர்ந்தவர்கள் இருக்கக் கூடாது என விதிமுறை புத்தகத்தை காட்டி முழக்கங்கள் எழுப்பினர். விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தினார். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. 

மற்ற சபையைச் சேர்ந்தவர்கள் சபாநாயகர் தேர்தலுக்கு வாக்களிக்கவில்லை, ஆனால் அவர்கள் இந்த அவையில் இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை என இடைக்கால சபாநாயகர் ஜித்தன் ராம் மஞ்சி தெரிவித்தார்.

அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் பாஜக வேட்பாளர் விஜய் குமார் சின்கா 126 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மெகா கூட்டணி வேட்பாளர் அவாத் பிகாரி சவுத்ரி 114 வாக்குகள் பெற்றார். 

சட்டசபையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 125 உறுப்பினர்கள் உள்ளனர். ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணிக்கு 110 பேரும், ஒவைசி கட்சிக்கு 5 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com