விக்கிரமங்கலம் அருகே மொபட் மீது கார் மோதி விவசாயி பலி

விக்கிரமங்கலம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள சுண்டக்குடி செட்டியார் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 60). விவசாயியான இவர் நேற்று முன்தினம் சொந்த வேலையின் காரணமாக சுண்டக்குடியில் இருந்து மொபட்டில் அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். நாகமங்கலம் மாதா கோவில் அருகே உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது அரியலூரில் இருந்து வந்த கார் எதிர்பாராதவிதமாக கோவிந்தராஜின் மொபட் மீது மோதியது. 

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி அவ்வழியாக சென்றவர்கள் விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற விக்கிரமங்கலம் போலீசார், கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த தேளூர் கிராமத்தை சேர்ந்த அசோக்குமாரை(38) விக்கிரமங்கலம் போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com