பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் முக்கிய பிரபலங்களுக்கு சிறப்பு சலுகைகள்?

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 10 முக்கிய பிரபலங்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படவில்லை என சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Published on

பெங்களூரு :

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் விசாரணை கைதிகள், வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் தான் சொத்து குவிப்பு வழக்கில் கைதான மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் அடைக்கப்பட்டு இருந்தார்.

தற்போது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்கு சிறைத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதாகவும் அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றச்சாட்டு கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பெங்களூரு வன்முறை வழக்கில் கைதான சம்பத்ராஜ், நகைக்கடை மோசடி வழக்கில் கைதாகி உள்ள முன்னாள் மந்திரி ரோஷன் பெய்க், போதைப்பொருட்கள் வழக்கில் சிக்கிய நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, வீரேன் கண்ணா, நிழல் உலக தாதா ரவி பூஜாரி, பண பரிமாற்ற வழக்கில் சிக்கிய கேரள முன்னாள் மந்திரி கொடியேறி பாலகிருஷ்ணாவின் மகன் பீனேஷ் ஆகியோரும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் சிறையில் 10 முக்கிய பிரபலங்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் முக்கிய பிரபலங்களுக்கு சிறையில் சில சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தன. இதை சிறைத்துறை முற்றிலும் மறுத்து உள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 10 முக்கிய பிரபலங்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. சக கைதிகளை நடத்துவதை போன்றே இவர்களையும் நடத்துகிறோம்.

சசிகலா, இளவரசி ஆகியோர் முக்கிய பிரமுகர்களின் பெண்கள் சிறையிலும், சுதாகரன் முக்கிய பிரமுகர்களின் ஆண் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலா, இளவரசி அடைக்கப்பட்டு உள்ள சிறை கட்டிடத்தில் உள்ள அறைகளில் தான் ராகிணி, சஞ்சனா ஆகியோர் தனித்தனியாக அடைக்கப்பட்டு உள்ளனர். முக்கிய பிரமுகர்கள் சிறையில் உள்ள உணவகத்தில் சில சமயங்களில் நூடுல்ஸ், முட்டை, பிரட் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றனர் என்று தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com