நடத்தையில் சந்தேகம்: உருட்டு கட்டையால் பெண் அடித்துக்கொலை

மேட்டுப்பாளையம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு உருட்டு கட்டையால் பெண்ணை அடித்துக்கொன்ற கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொலை
கொலை
Published on

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த அறிவொளி நகரை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 50). சவுரிமுடி தொழிலாளி. இவரது 2-வது மனைவி பார்வதி (45). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. முருகேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து உள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. மேலும் பார்வதியின் நடத்தையில் முருகேசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முருகேசுக்கும் பார்வதிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த முருகேஷ் அங்கு கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து பார்வதியை சரமாரியாக அடித்ததாக தெரிகிறது. இதில் கை,கால் முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு பார்வதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் திலக், சிவசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அறிவொளி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com