

மேச்சேரி:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே மசக்காளியூர் காட்டுவளவு பகுதியில் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இறந்து விட்டால், பல தலைமுறைகளாக தனியார் நிலத்தின் வழியாக சுடுகாட்டுக்கு சென்று உடலை அடக்கம் செய்து வந்தனர். இந்த நிலையில் மசக்காளியூரை சேர்ந்த செலம்பாயம்மாள் (வயது 75) என்பவர் இறந்து விட்டார்.
நேற்று மாலை அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டுக்கு உறவினர்கள் எடுத்துச் சென்ற போது, வழியில் இருந்த தனியார் தென்னந்தோப்பை சுற்றி கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் வழியில்லாமல் உடலை தோட்டத்திலேயே வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே பிணத்தை வைத்திருக்கக்கூடாது என்று கருதிய பெண்கள், திடீரென்று வேலியை அகற்றி விட்டு, பிணத்தை தூக்கிக்கொண்டு சென்றனர். இந்த நிலையில் அங்கு வருவாய்த்துறையினர், போலீசார் வந்தனர்.
அவர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, பல ஆண்டுகளாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக இந்த வழியாகத்தான் சென்று வருகிறோம். தற்போது அந்த வழியில் கம்பி வேலி அமைந்துள்ளனர். அதே நேரத்தில் சுடுகாட்டுக்கு செல்வதற்கு தோட்டத்தின் வழியாக வேறு ஒரு வழியும் உள்ளது. அந்த வழியில் நாங்கள் கோவிலுக்கு சாமியை மட்டும்தான் எடுத்துச் செல்வோம். பிணத்தை கொண்டு செல்ல மாட்டோம். எனவே எங்களுக்கு இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல வேறு வழி விட வேண்டும் என்று கூறினார்கள். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். அதன்பிறகு இறந்த மூதாட்டியின் உடல் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணி வரை பரபரப்பு நிலவியது.