விலைபேசிய நபர்கள் தாயை ஏமாற்றி குழந்தையை கடத்தினார்களா?- போலீசார் விசாரணை

குழந்தையை விலைக்கு கேட்ட நபர்களே தாயை ஏமாற்றி குழந்தையை கடத்திச் சென்று இருக்கலாம் என்பதால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தையை கையில் தூக்கிச் செல்லும் மர்மநபர்
குழந்தையை கையில் தூக்கிச் செல்லும் மர்மநபர்
Published on

பொள்ளாச்சி:

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). பழைய துணிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்பட 4 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் தொழிலுக்காக பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலைக்கு குடும்பத்தினருடன் வந்தார். அங்குள்ள பஸ்நிலையத்தில் அவர்கள் தங்கியிருந்தனர்.

நேற்றுமுன்தினம் இரவு சங்கீதாவும், அவரது குழந்தைகள் மட்டும் இருந்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் அங்கு வந்து சங்கீதாவிடம் பேச்சு கொடுத்தார். நான் பணம் தருகிறேன், குழந்தைகளுக்கு எதாவது உணவு வாங்கிக் கொடு என கூறினார். நீ உணவு வாங்கி வரும் வரை உன் 5 மாத குழந்தையை நான் கையில் வைத்திருக்கிறேன் என்று சொன்னார்.

இதை நம்பிய சங்கீதா, குழந்தையை அந்த நபரின் கையில் கொடுத்து விட்டு உணவு வாங்கச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த நபர், 5 மாத குழந்தையுடன் மாயமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா, குழந்தையை காணாமல் அழுது புரண்டார்.

இதுபற்றி அவர் ஆனைமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது 5 மாத குழந்தையை கையில் ஏந்திய படி மர்ம நபர்கள் கடத்திச் செல்லும் வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த நபர் முக கவசம் அணிந்து இருந்ததால் அவரை அடையாளம் காண முடியவில்லை. எனினும் சங்கீதா தெரிவித்த தகவல்களை கொண்டு போலீசார் அந்த நபர் யார்? என கண்டுபிடித்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

5 மாத குழந்தையை சில தினங்களுக்கு முன்பு சிலர் சங்கீதாவிடம் விலைக்கு கேட்டுள்ளனர். ஆனால் அவர் குழந்தையை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் குழந்தையை விலைக்கு கேட்ட நபர்களே சங்கீதாவை ஏமாற்றி குழந்தையை கடத்திச் சென்று இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com