நாளை பாபர் மசூதி இடிப்புதினம்- சென்னையில் 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் உரிய நீதி வழங்கப்படவில்லை என்று கூறி நாளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சென்னை:

அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் பிறகு ஆண்டு தோறும் முஸ்லீம் அமைப்பினர். டிசம்பர் 6-ந் தேதி அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு கோர்ட்டில் முடிவுக்கு வந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டவும், வேறு இடத்தில் பாபர் மசூதி கட்டிக்கொள்ளவும் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து அங்கு ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கியது.

இருப்பினும் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் உரிய நீதி வழங்கப்படவில்லை என்று கூறி இந்த ஆண்டும் வழக்கம் போல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி நாளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். 

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட இடங்களில் 23 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தென்சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொள்கிறார். வடசென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், காஞ்சீபுரத்தில் வக்கீல் ராஜாமுகம்மது ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இந்த போராட்டம் காரணமாக சென்னையில் நாளை பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com