திருச்சி அருகே ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை

திருச்சி அருகே நள்ளிரவில் இரண்டாவது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

உப்பிலியபுரம்:

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் பிரபு (வயது 38). இவரது மனைவி உஷா (30). இரண்டாவது மனைவியான இவருக்கு மித்ராஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.

முதல் மனைவி ரேணுகா 2 வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்ததையடுத்து பிரபு 2-வது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு இரட்டைக் குழந்தைகளான 10 வயதில் தேவா என்ற மகனும் தேவி என்ற மகளும் உள்ளனர்.

பிரபு, துறையூரில் லோடு ஆட்டோ டிரைவராக பணி வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 10 மணியளவில் துறையூரில் பணியை முடித்து விட்டு வீடு திரும்பியவர், மனைவியுடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.

அப்போது அவருக்கு செல்போனில் அழைப்பு வந்தது. இதையடுத்து அதனை தொடர்பு கொண்டு பேசிய பிரபு, சற்று நேரத்தில் வந்து விடுகிறேன் என மனைவியிடம் கூறி விட்டு வெளியே புறப்பட்டு சென்றார். இரவு முழுக்க காத்திருந்த உஷாவிற்கு, அதிகாலை பிரபு ரோட்டில் பிணமாக கிடப்பதாக தகவல் வந்தது.

இதைக்கேட்டு உஷா அலறியடித்துக்கொண்டு ஓடினார். ஆலத்துடையான்பட்டியிலிருந்து எம்.ஜி.ஆர். காலனி செல்லும் சாலையில் பிரபு ரத்தக்காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவலளித்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார், துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், முசிறி டி.எஸ்.பி. தமிழ்மணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதுகு, நெஞ்சு, கழுத்து பகுதிகளில் கத்திக்குத்துக் காயங்களுடன் பிரபு படுகொலை செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. இதற்கிடையே திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பிரபுவின் மனைவி உஷா மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார்.

திருச்சியிலிருந்து மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை பதிவு செய்தனர். கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்ப பிரச்சனையா அல்லது தொழில் போட்டியால் ஆட்டோ டிரைவர் பிரபு கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com