தாய்-மகள் மீது தாக்குதல் - பெண் உள்பட 2 பேர் கைது
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள மருங்குளம் மேல தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி இளஞ்சியம். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இவருடைய இளைய மகள் பெயர் திவ்யா. இவர் கள்ளச்சி என்ற பெயரில் டிக் டாக் செய்து வருகிறார் .
இந்த நிலையில் மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடியை சேர்ந்த சந்திரன் மற்றும் தேனி மாவட்டம் நாகனாபுரத்தை சேர்ந்த சுகந்தி ஆகியோருடன் திவ்யாவுக்கு டிக்டாக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது .இவர்களது இந்த பழக்கம் நாளடைவில் டிக்டாக் பதிவிடுவதில் மோதலாக உருவாகியுள்ளது. இந்த நிலையில் டிக் டாக் பதிவிடுவது சம்மந்தமாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்திரன் மற்றும் சுகந்தி ஆகிய இருவரும் திவ்யாவின் வீட்டிற்கு வந்துள்ளனர் .அப்போது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் சந்திரன் மற்றும் சுகந்தி இருவரும் சேர்ந்து திவ்யா மற்றும் அவருடைய தாய் இளஞ்சியத்தை கையால் தாக்கி தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து இளஞ்சியம் வல்லம் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரன் (வயது 24 ), சுகந்தி (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

