நெல் விதைகள் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்கப்படும் - வேளாண் இணை இயக்குனர் பேட்டி

நெல் விதைகள் தட்டுப்பாடின்றி இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற வேளாண் இணை இயக்குனர் ரமணன் கூறினார்.
வேளாண் இணை இயக்குனர்
வேளாண் இணை இயக்குனர்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனராக பணியாற்றி வந்த ராஜசேகர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருப்பத்தூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனராக பணியாற்றி வந்த கோ.ரமணன், விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். 

இவர் விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டம். இங்கு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. இம்மாவட்டத்தில் நெல், கரும்பு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. நெல்லுக்கு போதுமான அளவு விதைகள் இருப்பு வைத்து தட்டுப்பாடின்றி வழங்கப்படும். 

அதுபோல் கரும்புக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்கவும் மானியம் வழங்கப்படும். தற்போது கரும்பு சாகுபடி 10 ஆயிரம் ஹெக்டேர் அளவில்தான் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை அதிகரிக்க தேவையான ஏற்பாடு செய்யப்படும்.

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழும், 

விதை கிராம திட்டத்தின் கீழும் நெல் விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 20 கிலோ வரை விதைகள் வழங்கப்படும். எந்தவித குறைபாடும் இன்றி இருப்பு வைத்து போதுமான அளவில் நெல் விதைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி, வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com