மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து சிறுமியை கடத்தி வந்த வாலிபர் போலீசில் சிக்கினார்

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து சிறுமியை கடத்தி வந்த வாலிபர் போலீசில் சிக்கினார்.
கைது
கைது
Published on

திருப்பூர்:

மத்திய பிரதேச மாநிலம் பட்டாகபா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட சின்னு வாடா பகுதியை சேர்ந்தவர் பிஜேஸ் (வயது 22). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி திருப்பூர் அழைத்து வந்து முருங்கபாளையம் பகுதியில் குடியிருப்பதாகவும், இது குறித்து விசாரிக்குமாறும் பட்டாகபா போலீசார் திருப்பூர் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் சரவணகுமார், சத்தியேந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது அங்கு இருந்த பிஜேசுடன், 17 வயது சிறுமி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுமியை போலீசார் மீட்டு விசாரித்தனர். விசாரணையில் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்ளவதாக கூறி அழைத்து வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுமியையும், அவரை கடத்தி வந்த பிஜேசையும் போலீசார் மத்திய பிரதேச போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சிறப்பாக செயல்பட்ட திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com