திருச்சியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் நகை, மடிக்கணினி திருடியவர் கைது

திருச்சியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 6½ பவுன் நகை மற்றும் மடிக்கணினி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருச்சி:

திருச்சியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 6½ பவுன் நகை மற்றும் மடிக்கணினி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சி பீமநகர் கூனிபஜார் ஏ.பி.ஆர். அபார்ட்மெண்ட்டில் வசித்து வருபவர் தேவசகாயம் (வயது 60). இவர், தனியார் வீட்டு மனை விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி யூஜிமியாஜோஸ். இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 16-ந் தேதி தேவசகாயம் தனது மனைவியுடன் கரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் வீட்டில் இருந்த மகன் மற்றும் மகளும் வீட்டின் கதவை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு அவர்களும் உறவினர் வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேவசகாயம் தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த நிலையில் கிடந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் படுக்கை அறையில் உள்ள பீரோவை பார்த்தபோது அது திறந்து கிடந்தது.

அதில் வைக்கப்பட்டிருந்த 6½ பவுன் நகை மற்றும் மடிக்கணினி ஆகியவை திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம ஆசாமி ஒருவன், வீட்டின் கதவில் உள்ள பூட்டை உடைத்து நகை, மடிக்கணியை திருடியது தெரியவந்தது.

இது தொடர்பாக திருச்சி பாலக்கரை போலீசில் தேவசகாயம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட பீமநகர் கோரிமேடுவை சேர்ந்த பரமசிவன் மகன் சதீஷ் என்ற வாலிபரை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com