மனைவியின் கள்ளக்காதலனை கடத்தி அடி-உதை: கணவர் உள்பட 3 பேர் கைது

புஞ்சைபுளியம்பட்டி அருகே மனைவியின் கள்ளக்காதலனை கடத்தி அடித்து உதைத்ததாக கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

புஞ்சைபுளியம்பட்டி:

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள புலிப்பாரை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 46). இவர் புலிப்பார் ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி ஜோதிமணி (33). இவர் அவினாசியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் கண்ணன் குமார் (46). இவர் ஜோதிமணி வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இதனால் கண்ணன் குமாருக்கும், ஜோதிமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த மயில்சாமி தனது மனைவியிடம், கண்ணன் குமாருடனான கள்ளத்தொடர்பை துண்டிக்குமாறு கூறினார். இதனால் அவருக்கும், ஜோதிமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் கண்ணன் குமாரும், ஜோதிமணியும் கடந்த 15 தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர்.

பின்னர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மீனம்பாளையத்துக்கு சென்று ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கண்ணன் குமாரை தேடி மயில்சாமி தனது உறவினர்கள் கருப்புசாமி (32), கோவிந்தராஜ் (28), மற்றும் ராசம்மாள் ஆகியோருடன் ஒரு வேனில் நேற்று முன்தினம் புஞ்சைபுளியம்பட்டி வந்து இறங்கினார்.

அப்போது பவானிசாகர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நின்றிருந்த கண்ணன் குமாரை வேனில் கடத்தி சென்று அடித்து உதைத்துள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

பின்னர் அங்கிருந்து அவரை நேற்று காலை வேமாண்டம்பாளையத்துக்கு அழைத்து சென்று அரசு பஸ்சில் ஏற்றி விட்டு மயில்சாமி உள்ளிட்டோர் வேனில் தப்பி சென்றனர். புஞ்சைபுளியம்பட்டியில் இறங்கிய கண்ணன்குமார் அங்கிருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அவர் புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மயில்சாமி மற்றும் உறவினர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள டானாபுதூர் போலீஸ் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் வேனில் இருந்த 3 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மயில்சாமி, கருப்புசாமி, கோவிந்தராஜ் ஆகியோர் என்பதும், 3 பேரும் கண்ணன் குமாரை தாக்கியதையும் ஒப்புக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் வந்த வேனை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராசம்மாளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com