

நல்லம்பள்ளி:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வெங்காயனூர் கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா என்ற வனிதா (வயது 24), என்ஜினீயர். வனிதாவிற்கும், தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே மலையப்ப நகர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கவாசகம் (30) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. மாணிக்கவாசகம் ராணுவத்தில் பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது. 4 மாத கர்ப்பிணியாக இருந்த வனிதா கடந்த 21-ந் தேதி கணவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தொப்பூர் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனிதாவின் பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் வனிதாவின் உறவினர்கள், குறிஞ்சி நகர் சுங்கச்சாவடி முன்பு ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி வனிதாவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் திருமணமாகி 6 மாதமே ஆன 4 மாத கார்ப்பிணியான வனிதா இறப்பு குறித்து, தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் விசாரணை நடத்தினார்.
அப்போது வனிதா இறப்புக்கு அவரது கணவர் மாணிக்கவாசகம் தான் காரணம் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தொப்பூர் போலீசார் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரரான மாணிக்கவாசகத்தை நேற்று கைதுசெய்தனர்.