ஆசிரியர் வீட்டில் 5 பவுன் நகை- 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

ஆசிரியர் வீட்டில் 5 பவுன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

அரிமளம்:

அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டி செட்டி தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது 62). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். திருவிழா சமயங்களில் மட்டும் கே.புதுப்பட்டியில் உள்ள வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் இவருடைய 60-ம் கல்யாண தினத்தை முன்னிட்டு கே. புதுப்பட்டி கிராமத்துக்கு வந்தார். பின்னர் அவர் இளையான்குடியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

அப்போது, வீட்டின் கதவு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3½ லட்சம் ஆகும்.

இது குறித்து கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

தடயவியல் நிபுணர்கள் மர்ம ஆசாமிகளின் விரல் ரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com