திருப்பத்தூரில் அ.ம.மு.க. நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை

திருப்பத்தூரில் அ.ம.மு.க. மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
வானவராயன்
வானவராயன்
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் கவுதம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வானவராயன் (வயது 30). இவர் திருப்பத்தூர் மாவட்ட அ.ம.மு.க. மாணவர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்.

நேற்று மாலை வானவராயன் வீட்டில் இருந்து பணவசூலுக்கு சென்றார். வசூல் முடித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பூங்காவனத்தம்மன் கோவில் வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பல் வானவராயனை வழிமடக்கி அரிவாளால் வெட்ட முயன்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டி நடுரோட்டில் வெட்டி சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் வானவராயன் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

அதன்பின் அந்த கும்பல் சின்னக்கடை வீதி வழியாக தப்பியோடிவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வானவராயன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே சில வருடத்திற்கு முன்பு வானவராயனை ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அந்த கும்பலே தற்போது கொலை செய்து இருக்கலாமா? அல்லது வேறு காரணம் எதுவும் இருக்குமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட வானவராயனுக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com