திண்டுக்கல் அருகே போலி மருத்துவரான அ.ம.மு.க நிர்வாகி கைது

திண்டுக்கல் அருகே எம்.பி.பி.எஸ். படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் போலி டாக்டர்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதையடுத்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் மருத்துவக்குழுவினர் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சாணார்பட்டி அருகில் உள்ள வேம்பார்பட்டி அய்யாபட்டியில் மருத்துவம் படிக்காமல் தனது வீட்டிலேயே கிளினிக் நடத்தி வந்த காளியப்பன்(54) என்பவரை சுற்றி வளைத்தனர்.

சாணார்பட்டி போலீசார் உதவியுடன் அவரை கைது செய்து அவரது மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். கைதான காளியப்பன் சாணார்பட்டி தெற்கு ஒன்றிய அ.ம.மு.க செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது வீட்டிலேயே அறுவை சிகிச்சை கூடம் மற்றும் குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் கூடிய அறைகள் அமைத்திருந்ததும், மதுரையை சேர்ந்த டாக்டர்கள் சிலர் இங்கு வந்து சென்றதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் அந்த டாக்டர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் வத்திப்பட்டி, செந்துறையில் 2 பேர் மருத்துவமனை வரையறை சட்டத்தின்கீழ் பதிவு செய்யாமல் சிகிச்சை அளிப்பதை கண்டறிந்தனர். அந்த 2 கிளினிக் உரிமையாளர்களையும் அதிகாரிகள் எச்சரித்து பதிவு செய்ய தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதேபோல் குஜிலியம்பாறை துணை இயக்குனர் பூங்கோதை தலைமையில் மருத்துவக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிரதான சாலையில் செயல்பட்டு வந்த மருந்துகடையில் செல்வி(40) என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அவரை பிடிக்க முயன்றபோது செல்வி தப்பிஓடிவிட்டார். இதனையடுத்து அவர் நடத்தி வந்த மருந்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தப்பி ஓடிய செல்வி மீது குஜிலியம்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com