கிழிந்த ஜீன்ஸ் சர்ச்சையை தொடர்ந்து புதிய சர்ச்சையில் சிக்கிய உத்தரகாண்ட் முதல்வர்

நரேந்திர மோடிக்கு பதிலாக வேறு யாராவது பிரதமராக இருந்திருந்தால், இந்தியா மோசமான நிலையில் இருந்திருக்கும் என உத்தரகாண்ட் முதல்வர் கூறி உள்ளார்.
உத்தரகாண்ட் முதல்வர் திராத் சிங் ராவத்
உத்தரகாண்ட் முதல்வர் திராத் சிங் ராவத்
Published on

டேராடூன்:

இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவது குறித்து உத்தரகாண்ட் மாநில முதல்வர் திராத் சிங் ராவத் சமீபத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து சமூகத்தில் பணியாற்றும் போது அவர் எப்படி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ முடியும்? அவரது குழந்தைகள் என்ன மாதிரியான மதிப்புகளை கற்றுக் கொள்வர்? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். 

அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பிரபலங்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். சமூக வலைதளங்களில் #RippedJeans என்ற ஹேஷ்டேக் வைரலானது.

இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், இப்போது அமெரிக்காவைப் பற்றி பேசி புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியதாவது:-

தொற்றுநோயைக் கையாள்வதில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது. 200 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தி உலகம் முழுவதையும் ஆட்சி செய்த அமெரிக்கா தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது. சுகாதாரத்துறையில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மீண்டும் ஊரடங்கு உத்தரவு போடும் நிலை உள்ளது. 

இந்த நேரத்தில் நரேந்திர மோடிக்கு பதிலாக வேறு யாராவது பிரதமராக இருந்திருந்தால், இந்தியா மோசமான நிலையில் இருந்திருக்கும். ஆனால் அவர் (பிரதமர்) நமக்கு நிவாரணம் அளித்தார். ஒவ்வொருவரையும் அவர் பாதுகாத்தார். ஆனால் பெரும்பாலானோர் அவரது அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை. ஒரு சிலர் பின்பற்றுகின்றனர். 

இவ்வாறு அவர் பேசினார்.

கொரோனா தொற்று எண்ணிக்கையில் இந்தியாவையும் அமெரிக்காவையும் ஒப்பிட்டு அந்த வீடியோவில் உத்தரகாண்ட் முதல்வர் பேசியிருந்தார். ஆனால் அமெரிக்கா 200 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தியிருந்ததாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com