கொல்லங்கோடு அருகே நடந்து சென்ற பெண்ணை தாக்கி 9 பவுன் நகை பறிப்பு

கொல்லங்கோடு அருகே நடந்து சென்ற பெண்ணை தாக்கி 9 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

நாகர்கோவில்:

கொல்லங்கோடு அருகே பாலவிளையை அடுத்த கருப்பனாவிளையைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி. இவரது மனைவி கலா ஜெயந்தி (வயது 42).

இவர், நேற்று மாலை வீட்டில் இருந்து அந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். புன்னமூட்டு கடை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் கலாஜெயந்தியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்தனர்.

அப்போது கலாஜெயந்தி செயினை பிடித்துக்கொண்டார். கொள்ளையர்களுடன் கடுமையாக போராடினார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் கலாஜெயந்தியை சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்து விட்டு தப்பியோடி விட்டனர்.

இது குறித்து கொல்லங்கோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். கலாஜெயந்தியிடம் கொள்ளையர்கள் குறித்த அடையாளங்களை கேட்டறிந்த போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை. இதையடுத்து சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com