82 கிராமங்களில் எருதுவிடும் விழா நடத்த அனுமதி- கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் 82 கிராமங்களில் எருதுவிடும் விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்
வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்
Published on

வேலூர்:

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் எருதுவிடும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதுதொடர்பாக எருதுவிடும் விழா சங்கத்தினர் மற்றும் காளை உரிமையாளர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அரசு வகுத்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் விழா குழுவினர் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:-

கொரோனா தொற்று காரணமாக வேலூர் மாவட்டத்தில் 82 கிராமங்களில் மட்டுமே எருது விடும் விழா நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் ஜனவரி 14-ந் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 28-ந் தேதிக்குள் அனைத்து எருது விடும் விழாக்களையும் நடத்தி முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் எருது விடும் விழா நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன் காளையின் உரிமையாளர்கள், உடன் வருவோர் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றை பெற்றிருக்க வேண்டும். சான்று பெறாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எருதுவிடும் விழாவில் 150 வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். பார்வையாளராக வரும் அனைவருக்கும் விழா நடைபெறும் இடத்திலேயே காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும். எருதுவிடும் விழா நடத்த ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள் ஆகும்.. அனுமதி பெறாமல் எருதுவிடும் விழா நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com