ஜலகண்டாபுரம் அருகே மூதாட்டி கல்லால் தாக்கி கொலை- பேரன் கைது

ஜலகண்டாபுரம் அருகே மூதாட்டியை கல்லால் தாக்கி கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

மேச்சேரி:

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள அகிலாண்டம்மாள் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 36). இவர் தனது தாயார் பரிமளம் மற்றும் பாட்டி பாவாயம்மாள் (80) ஆகியோருடன் வசித்து வந்தார். ராஜேந்திரன் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளளர். தற்போது தறிப்பட்டறையில் லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனை மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் அக்கம்பக்கத்து வீடுகளில் பொருட்களை உடைத்து சேதப்படுத்தி வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் ஒரு சரக்கு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவின் கண்ணாடியை ராஜேந்திரன் உடைத்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த அவரது பாட்டி பாவாயம்மாள், கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன், அங்கு கீழே கிடந்த செங்கல்லை எடுத்து பாவாயம்மாளை தாக்கினார். இதில் தலை மற்றும் காது பகுதியில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இது குறித்து ஜலகண்டாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பாவாயம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com