68 வயது மூதாட்டியை காதல் திருமணம் செய்த 73 வயது முதியவர்

கொரோனா பரிசோதனை மையத்திற்கு சென்ற போது ஏற்பட்ட சந்திப்பால் உருவான காதல் திருமணத்தில் முடிந்துள்ளது.
வர்க்கீஸ்-அஸ்வதி
வர்க்கீஸ்-அஸ்வதி
Published on

திருவனந்தபுரம்:

காதலுக்கு வயது கிடையாது. ஒருவர் மீது மனதில் அன்பு உருவானால் அது எந்த நேரத்திலும் வெளிப்படும். கேரளாவில் 73 வயது முதியவர் ஒருவருக்கு 68 வயது மூதாட்டி ஒருவருடன் ஏற்பட்ட காதல் நேற்று திருமணத்தில் முடிந்தது. இது பற்றிய விபரம் வருமாறு:-

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த காக்கநாடு பகுதியை சேர்ந்தவர் வர்க்கீஸ் (வயது 73). கேட்டரிங் உரிமையாளர்.

வர்க்கீசுக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளிமாநிலங்களில் வசித்து வருகிறார்கள்.

இதனால் வர்க்கீஸ் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக தொழிலில் முடக்கம் ஏற்பட்டதால் இவர் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். அப்போது தான் முதியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி தடுப்பூசி போடும் முகாம்கள் கொச்சியில் நடந்தது.

கொரோனா பரிசோதனை முகாமுக்கு வர்க்கீஸ் சென்ற போது, அங்கு அதே பகுதியை சேர்ந்த அஸ்வதி (68) என்ற பெண்ணை சந்தித்தார். அஸ்வதிக்கும் திருமணமாகி மகள் உள்ளார். இவரது கணவர் லண்டனில் டாக்டராக இருந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து போனார். இதனால் அஸ்வதி கொச்சியில் தனியாக வசித்து வந்தார். அங்கு ஒரு பியூட்டி பார்லரும் நடத்தி வந்தார். வர்க்கீஸ் சென்ற கொரோனா பரிசோதனை மையத்திற்கு இவரும் சென்றார். அங்கு அஸ்வதியும், வர்க்கீசும் சந்தித்து கொண்டனர். அப்போது இருவரும் மனம் விட்டு பேசினர். முதிய வயதில் தனிமையின் கொடுமை பற்றி அவர்கள் பேசிக்கொண்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொண்ட நிலையில் அடுத்த கட்டமாக திருணம் செய்து கொண்டால் என்ன? என்று யோசித்தனர்.

இந்த யோசனையை அவர்கள் தங்களின் மகன், மகள்களிடம் கூறினர். வெளியூர்களில் வசிக்கும் மகன்கள் தந்தையின் ஆசைக்கு குறுக்கே நிற்க விரும்பவில்லை. வர்க்கீஸ், அஸ்வதியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டனர்.

இதுபோல அஸ்வதியின் மகளும், தாயார் அவரது காதலன் வர்க்கீசை மணம் முடிக்க ஒப்புக்கொண்டார். இதையடுத்து வர்க்கீஸ் - அஸ்வதி திருமணம் நேற்று கொச்சியில் எளிமையாக நடந்தது. இருவரின் மகன், மகள் மற்றும் பேரன், பேத்திகள் முன்னிலையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com