திருப்பூர் மாவட்டத்தில் 2-வது நாளாக 70 சதவீத பஸ்கள் ஓடவில்லை

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 70 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படாததால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஸ்டிரைக் காரணமாக திருப்பூர் பணிமனையில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
ஸ்டிரைக் காரணமாக திருப்பூர் பணிமனையில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
Published on

திருப்பூர்:

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும். மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும். போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்தம் செய்வது என அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பளம் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் நேற்று முதல் தமிழகத்தில் அனைத்து தொழிற்சங்க போக்குவரத்து கழக பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 60 சதவீத பஸ்கள் இயக்கப்படாத நிலையில், இன்று 2-வது நாளாக 70 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. திருப்பூரில் 2 பணிமனைகள் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம், தாராபுரம், காங்கேயம், உடுமலை ஆகிய பணிமனைகள் மூலம் 520 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 70 சதவீதம் வரை பஸ்கள் இயக்கப்படவில்லை.

தொழில்நகரமான திருப்பூரில் பெரும்பாலான தொழிலாளர்கள் பஸ்களிலேயே பயணம் செய்கின்றனர். இந்தநிலையில் இன்று 70 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படாததால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக கிராமப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.

குறைந்த அளவிலான அரசு பஸ்களே இயக்கப்பட்டதால் திருப்பூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தனியார் பஸ்களில் பயணிகள் அதிகம் பேர் பயணித்தனர்.

மேலும் பஸ் ஸ்டிரைக் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மாணவர்கள் குறைந்த அளவிலேயே வந்தனர். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு ஆல்-பாஸ் அறிவிக்கப்பட்ட போதும் பிளஸ்-2 தேர்வில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டியிருக்கும். தொடர் பஸ் ஸ்டிரைக்கால் மேலும் மாணவர்கள் வருகை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com