

சென்னை:
போலியோ சொட்டு மருந்து முகாம் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றன. இந்த வருடம் கொரோனா தொற்று பரவல் காரணமாக தாமதமாக நடக்கிறது.
வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் நடக்கிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
சென்னையில் 6 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்கு மாநகராட்சி ஏற்பாடுகள் செய்து வருகின்றன. பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்படுகின்றன. மாநகராட்சி பள்ளிக்கூடங்கள், அரசு, தனியார் பள்ளிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து முறையாக கொடுத்து இருந்தாலும் 31-ந்தேதி நடைபெறும் முகாமிலும் அவசியம் சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம். முகாம் நாட்களில் கொடுக்கப்படும் சொட்டு மருந்தும் வழக்கமான தவணைகளில் கொடுக்கப்படும் சொட்டு மருந்தும் மாற்று மருந்து அல்ல. இது ஒரு கூடுதல் தவணையாகும்.
மற்ற மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தம் காரணமாக சென்னை நகரில் குடியேறி இங்கு தொடர்ந்து தங்கி இருப்பவர்கள் இந்த நாளில் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன் பெறுமாறு மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சொட்டு மருந்து முகாம்களில் சிறப்பாக பணி செய்ய பல்வேறு அரசு துறை பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி, மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என 6700 பேர் ஈடுபடுகிறார்கள்.