ஏரலில் மூதாட்டியை அடித்துக்கொன்று 5 பவுன் நகை கொள்ளை

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இன்று அதிகாலையில் மூதாட்டியை அடித்துக்கொன்று 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் மேலூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் துரைபாண்டி(வயது 78). இவரது மனைவி முத்துக்கிளி(65).

இவர்களது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி சென்னையில் உள்ளனர். இதனால் கணவன்-மனைவி இருவரும் வாழவல்லானில் உள்ள பண்ணை வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இன்று காலை 6 மணி அளவில் முத்துக்கிளி வழக்கம்போல் வீட்டின் வாசலில் நீர் தெளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் முத்துக்கிளியின் கழுத்தில் கிடந்த தங்க நகையை நோட்டமிட்டுள்ளார். பின்னர் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்த மர்மநபர் சற்றும் தாமதிக்காமல் முத்துக்கிளியை தாக்கி உள்ளார்.

அங்கு கிடந்த கட்டையால் அவரது தலையில் தாக்கி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் முத்துக்கிளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே மர்ம நபர், அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கநகையை பறித்துவிட்டு தப்பி ஓடினார்.

இதற்கிடையே தண்ணீர் தெளிக்க சென்ற முத்துக்கிளி நீண்ட நேரமாகியும் வராததால் துரைப்பாண்டி வாசலுக்கு சென்று பார்த்தார். அப்போது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த முத்துக்கிளியை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் அவரது கழுத்தில் கிடந்த தங்க செயினையும் காணவில்லை. இதனால் நகைக்காக மர்மநபர் யாரோ அவரை அடித்துக் கொலை செய்துள்ளதை துரைப்பாண்டி அறிந்தார்.

இதுகுறித்து அவர் ஏரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் ஜெமிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துக்கிளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணை கொலை செய்துவிட்டு நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com