ராமநாதபுரம் அருகே 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் - பதப்படுத்தப்படும் பொருட்களுடன் 2 பேர் கைது

ராமநாதபுரம் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் மற்றும் பதப்படுத்தப்படும் பொருட்களுடன் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

ராமநாதபுரம்:

கடல் வாழ் அரிய வகை உயிரினங்களை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து கடல் பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் இப்பகுதியில் சட்டவிரோதமாக தொடர்ந்து கடல் அட்டைகள் பிடித்து பதப்படுத்தி இலங்கை கடத்திச் சென்று அங்கிருந்து சீனா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

பல்வேறு துறையினர் கண்காணிப்பு மீறி கடத்தல் தொழில் அமோகமாக நடந்து வருகிறது. கடத்தல் குறித்து ரகசிய தகவல் தெரிவிப்பவர்கள் உள்ளூரில் உள்ள வனத்துறையினருக்கு தகவல் தெரிவிப்பது கிடையாது. நேரடியாக சென்னைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் லோகநாதன் தலைமையில் வனக்காப்பாளர்கள் சரவணன், கார்த்திக், சிவகுமார், லல்லு பிரசாத், தமிழரசன் ஆகியோர் தேவிபட்டினம் பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது தேவிபட்டினம் சித்திக் என்பவருக்கு சொந்தமான குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக சென்னை கூடுதல் முதன்மை வன பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு வனத்துறையினர் சென்ற போது அங்கு சுமார் 600 கிலோ எடை உள்ள கடல் அட்டைகள் மற்றும் பதப்படுத்தப்படும் பொருட்கள் இருந்தது.

அங்கிருந்த தேவிபட்டினத்தைச் சேர்ந்த சித்திக் (வயது 57), ஜாஹிர் உசேன் (27) ஆகிய இருவரையும் கைது செய்து கடல் அட்டை மற்றும் பதப்படுத்தப்படும் பொருட்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com