திருச்செந்தூரில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 600 கிலோ பீடி இலை பறிமுதல்

திருச்செந்தூரில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 600 கிலோ பீடி இலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள்.
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக கியூபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 2 பைபர் படகில் சுமார் 20 பேர் கும்பல் சாக்கு மூட்டைகளை படகில் ஏற்றி கொண்டு இருந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதில் ஆலந்தலை பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் பீடி இலைகளை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

அவரை விசாரிக்க முயன்றபோது, போலீசாரை அவதூறாக பேசி கம்பியால் தாக்க முயன்றுள்ளார். ஆனால் அதில் இருந்து போலீசார் தப்பித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் படகில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளுடன் அந்த கும்பல் கடலுக்குள் தப்பி சென்றது.

கியூ பிரிவு போலீசார் கடற்கரை பகுதியில் அந்த கும்பல் விட்டுச்சென்ற 16 மூட்டைகளை பறிமுதல் செய்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதில் சுமார் 600 கிலோ எடை கொண்ட இலை இருந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

இதுதொடர்பாக கியூ பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில், ஆலந்தலையை சேர்ந்த சுஜய், நிசாந்தன், பிரதாப், ஆனந்த் உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com