ராமநத்தம் அருகே அண்ணியை கேலி செய்தவர்களை கண்டித்த கொழுந்தன் கொலை- 6 பேர் கைது

அண்ணியை கேலி செய்தவர்களை கண்டித்த கொழுந்தனை கொலை செய்த 6 போ் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வையாபுரி
வையாபுரி
Published on

ராமநத்தம்:

ராமநத்தம் அடுத்த ம.பொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி பிரியா (வயது 24). நேற்று முன்தினம் இவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வரும் வழியில் நின்று கொண்டிருந்த 6 பேர், பிரியாவை ஆபாச வார்த்தையால் திட்டி கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது.

பின்னர் வீட்டுக்கு வந்த பிரியா இதுபற்றி தனது கணவர் ரவிச்சந்திரனிடம் தெரிவித்தார். இதையடுத்து ரவிச்சந்திரன், தனது மனைவியை கிண்டல் செய்தவர்களிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ரவிச்சந்திரனை அவர்கள் தாக்கினர். இதுபற்றி அறிந்ததும் ரவிச்சந்திரனின் தம்பி வையாபுரியும்(36) அங்கு சென்று, அவர்களை கண்டித்தார்.

இதில் அவர்கள் 6 பேரும் சேர்ந்து அவரை கல்லால் தாக்கி விட்டு தப்பி ஓடினர். பலத்த காயமடைந்த வையாபுரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வையாபுரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வையாபுரியை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் ராமலிங்கம்(27), தன்வேல் மகன்கள் இளவரசன் (38), ரமேஷ்(35), வையாபுரி மகன் செந்தாமரை(25), சங்கர் மகன் ராகுல்(20), அண்ணாமலை மகன் அஜித்குமார்(20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ராமலிங்கம் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com