பெரம்பலூரில் 2 ஆயிரம் டன் வெங்காயம் பதுக்கல்- வியாபாரிகள் 6 பேர் கைது

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கூடுதல் விலைக்கு விற்பதற்காக 2 ஆயிரம் டன் வெங்காயத்தை பதுக்கிய வியாபாரிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருச்சி:

நாடு முழுவதும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வெங்காயத்தின் விலை மேலும் உயரக்கூடும் என்பதால் திருச்சியை சேர்ந்த வெங்காய மொத்த வியாபாரிகள் வெளிமாநிலங்களில் இருந்து, வெங்காயத்தை கொண்டு வந்து பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் திருச்சி உட்கோட்ட குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லு சாமி தலைமையிலான போலீசார் பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோழிப்பண்ணைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

இதில் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் முத்துச் செல்வம் என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் இருந்து 100 டன் வெங்காயமும், கூத்தனூர் சாலையில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் இருந்து 71 டன்னும், பெரம்பலூர் தாலுகா சத்திரமனை கிராமத்தில் அழகேசன் என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் இருந்து 202 டன் னும், சத்திரமனை கிராமத்தில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் இருந்து 110 டன்னும் என மொத்தம் 2000 டன் பெரிய வெங்காயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சியை சேர்ந்த வெங்காய மொத்த வியாபாரிகள் 3 பேர் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரிய வெங்காயம் குறைவான விலைக்கு விற்ற போது அதனை வாங்கி, அவற்றை இங்குள்ள கோழிப் பண்ணைகளில் பதுக்கி வைத்திருந்ததும், தீபாவளி பண்டிகை காலத்தில் விலை அதிகமாக உயரும் போது, இந்த வெங்காயத்தை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

கோழிப்பண்ணை உரிமையாளர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்திய குடிமை பொருள் போலீசார் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் தடுப்பு பிரிவின் கீழ் கோழிப்பண்ணை உரிமையாளர்களான பெரம்பலூர் மாவட்டம் இரூரை சேர்ந்த முத்து செல்வம் (வயது 30), கூத்தனூர் ரவிச்சந்திரன் (32), சத்திரமனை அழகேசன் (64), நடராஜன் (54) மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட வீரமணி (31) மற்றும் ஒருவர் என 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் திருச்சியை சேர்ந்த 3 வியாபாரிகளிடம் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் அவர்களும் கைதாக வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com