நாத்தனார் வீட்டில் நகைகளை கொள்ளையடிக்க கள்ளக்காதலனுக்கு உதவிய பெண்

மண்டைக்காடு அருகே 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 8 மாதத்திற்கு பின் கள்ளக்காதலியுடன் ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயர் கைதாகியுள்ளார்.
நகைகள்
நகைகள்
Published on

குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள அழகன்பாறை வசந்தபுரத்தை சேர்ந்தவர் பிரசன்னகுமார். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பேபி சுதா (வயது43).

பேபி சுதாவின் தாய் வீடு குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரத்தில் இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி பேபி சுதா தனது வீட்டை பூட்டிவிட்டு, சாவியை பக்கத்து வீட்டில் உள்ள உறவினரிடம் கொடுத்து விட்டு பெத்தேல்புரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மறுநாள் பேபி சுதாவின் வீட்டை அவரது உறவினர் திறந்து பார்க்கும்போது மேல்மாடியில் உள்ள அறைக்கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அதுபற்றி பேபி சுதாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 50 பவுன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பேபி சுதா மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டது யார் ? என்று விசாரணை நடத்தி வந்தனர். இதற்காக சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பேபி சுதாவின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது பெத்தேல்புரத்தை சேர்ந்த தேவ சுதர் என்பவரின் மனைவி டிரைலின் சர்மிலி மோள்(24) மற்றும் அதே ஊரை சேர்ந்த ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயர் பபின்(27) என்பதும் தெரிய வந்தது.

திருட்டில் ஈடுபட்டது எப்படி என்று கைதான ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர் பபின் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

என்னுடைய தந்தை வீடு கட்டி வந்தார். திடீரென அவர் இறந்துவிட்டார். இதனால் வீடு கட்டும் பணி பாதியிலேயே நின்றது. வீட்டை எப்படி கட்டி முடிக்கப்போகிறோம் என்று திணறினேன். மேலும் எனக்கு கடன் சுமை அதிகமாக இருந்தது.

எனது பக்கத்து வீட்டில் வசித்துவரும் டிரைலின் சர்மிலிமோளுடன் எனக்கு பழக்கம் இருந்தது. இதனால் அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கித்தருமாறு கேட்டேன். மேலும் அவரது வீட்டிற்கு ஒரு பெண் அதிக நகைகள் அணிந்து வந்துசென்றார். அதுபற்றி டிரைலின் சர்மிலி மோளிடம் கேட்டபோது, அந்த பெண் அவளுடைய கணவரின் தங்கை பேபி சுதா என்பதையும், அவர் வசதியாக இருப்பதையும் அறிந்துகொண்டேன்.

எனக்கு வீடு கட்டவும், கடன்களை அடைக்கவும் பணம் தேவைப்பட்டதால் அவரது வீட்டில் திருட திட்டமிட்டேன். இதுகுறித்து டிரைலின் சர்மிலிமோளிடம் தெரிவித்தபோது முதலில் தயங்கினார். பின்பு எனக்கு உதவுவதற்கு சம்மதம் தெரிவித்தார்.

பேபி சுதா வீட்டில் எங்கு நகைகளை வைப்பார் என்ற தகவலை கள்ளக்காதலி டிரைலின் சர்மிலிமோள் மூலம் தெரிந்து கொண்டேன். நகைகள் இருந்த மாடி அறைக்கான கள்ளச்சாவியை தயார் செய்தேன். சம்பவத்தன்று பேபி சுதா வீட்டில் ஆள் இல்லாததையறிந்து அங்கு திருட சென்றேன்.

கள்ளச்சாவியால் அறையை திறக்க முயன்றேன். ஆனால் அறைக்கதவை திறக்க முடியவில்லை. இதனால் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 50பவுன் நகைகளை திருடினேன். திருடிய நகைகளை மார்த்தாண்டத்தில் விற்று பணம் பெற்றேன்.

இதையடுத்து டிரைலின் சர்மிலிமோள் தேர்வு எழுத செல்வதாக கூறிவிட்டு நெல்லைக்கு வந்துவிட்டார். இதையடுத்து நானும், அவளும் ஊட்டிக்கு சென்றோம். அங்கு நாங்கள் 4 நாட்கள் தங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து விட்டோம்.

பின்பு திருடிய நகைகள் மூலம் கிடைத்த பணத்தை வைத்து வீட்டை கட்டி முடித்தேன். அதன்பிறகு நான் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுவிட்டேன். டிரைலின் சர்மிலிமோளும் கடந்த 2-ந்தேதி தனது 3 வயது மகனை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு என்னுடன் வந்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து நாங்கள் இருவரும் கோவைக்கு சென்று கணவன்-மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தினோம். ஆனால் போலீசார் எங்களை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்திருக்கிறார்.

கைது செய்யப்பட்ட டிரைலின் சர்மிலி மோள் தக்கலை பெண்கள் சிறையிலும், பபின் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். பேபி சுதாவின் வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால் அவர்களிடம் இருந்து 29½ பவுன் நகைகளே மீட்கப்பட்டு உள்ளன.

திருட்டில் ஈடுபட்டபிறகு கள்ளக்காதலர்கள் இருவரும் ஊட்டிக்கு சென்று தங்கி உள்ளனர். அங்கு திருடிய நகைகளை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தில் 4 நாட்கள் உல்லாசமாக சுற்றி திரிந்திருக்கிறார்கள். அதன் பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய இருவரும் எதுவும் தெரியாதது போன்று அவரவர் வீட்டில் இருந்து வந்திருக்கிறார்கள்.

பின்னர் இந்த மாத தொடக்கத்தில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கோவைக்கு சென்று குடும்பம் நடத்தினர். திருட்டு நடந்த பகுதியில் இருவர் மாயமானதால் சந்தேகமடைந்த போலீசார் விசாரித்தபோது, கள்ளக்காதல் ஜோடியே கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com