சாக்கடை கால்வாய் சிலாப் உடைந்து 5 பேர் படுகாயம்- அமித்‌ஷா பிரசாரத்தில் பரபரப்பு

சிமெண்டு சிலாப் ஏற்கனவே பழுதடைந்த நிலையில் அதிகம் பேர் ஏறி நின்றதால் உடைந்து விழுந்தது. இதில் 5 பேர் கால்வாய்க்குள் விழுந்து காயம் அடைந்தனர்.
சாக்கடை கால்வாய் சிலாப் உடைந்து 5 பேர் படுகாயம்
சாக்கடை கால்வாய் சிலாப் உடைந்து 5 பேர் படுகாயம்
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மத்திய மந்திரி அமித்ஷா நேற்று காலை வந்தார். லாஸ்பேட்டை உழவர்சந்தை அருகே உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு திறந்த ஜீப்பில் புறப்பட்டார். அப்போது அவரை சுற்றி தொண்டர்கள் நின்றனர். இதனால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்த வாகனங்களை முன்னே எடுத்துச் செல்லுமாறு அமித்ஷா இந்தியில் கூறினார். அவர் இந்தியில் பேசியது தெரியாத நிலையில் தொண்டர்கள் அப்படியே நின்றபடி இருந்தனர்.

உடனே அங்கிருந்த சாமிநாதன் முன்னே உள்ள வாகனங்களை அப்படியே ஓட்டிச் செல்லுமாறு தமிழில் கூறினார். அந்த வாகனங்கள் முன்னே சென்றதால் அங்கிருந்தவர்கள் சாலையின் இருபுறமும் ஒதுங்கினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் வாய்க்காலில் போடப்பட்டிருந்த சிலாப் மீது ஏறி நின்றனர். ஏற்கனவே பழுதடைந்த நிலையில் அதிகம் பேர் ஏறி நின்றதால் சிமெண்டு சிலாப் உடைந்து விழுந்தது. இதில் 4 பெண்கள் உள்பட 5 பேர் கால்வாய்க்குள் விழுந்து காயம் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்களை பா.ஜ.க.வினர் மீட்டு பிரசார ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com