

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், மஞ்சள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை படகுகள் மூலம் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இதனால் மாவட்ட கடலோர காவல்படையினர், கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த அப்துல் காதர் (வயது 50) என்பவருக்கு சொந்தமாக கடற்கரை அருகில் உள்ள மீன் கம்பெனி குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து தருவைகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 20 கேன்களில் சுமார் 300 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட கடல் அட்டை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார் கடல் அட்டைகள் பதுக்கியதில் தொடர்புடையவர்கள் யார்-யார்? இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.