மகள் திருமணத்திற்கு வைத்திருந்த 30 பவுன் நகை-ரூ.3 லட்சம் கொள்ளை

திருவண்ணாமலையில் மின்வாரிய அலுவலர் வீட்டில் மகள் திருமணத்திற்கு வைத்திருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளை நடந்த வீட்டில் பீரோ திறந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
கொள்ளை நடந்த வீட்டில் பீரோ திறந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தாமரை நகர் 21-வது தெருவில் வசிப்பவர் ராஜசேகரன் (வயது58). இவர் திருவண்ணாமலை மின்வாரியத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதை முன்னிட்டு அவர் குடும்பத்தினருடன் ஜவுளி எடுப்பதற்காக சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது தனதுவீட்டை பூட்டி விட்டு அருகில் வசிப்பவர்களிடம் சொல்லிவிட்டு சென்றார்.

வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.33 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ராஜசேகரன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்து இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி உடனடியாக திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சென்னையில் உள்ள ராஜசேகரனிடம் இது பற்றி தகவல் தெரிவித்தனர். அப்போது அவர் தனது மகள் திருமணத்திற்கு வைத்திருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் திருட்டு போய் விட்டதாக தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் திருவண்ணாமலை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com