

மன்னார்குடி:
மன்னார்குடி வானப்பட்டறை தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மஞ்சு (வயது24). இவரும், அவரது தாயாரும் சம்பவத்தன்று அதிகாலை 6 மணிக்கு ராஜகோபாலசாமி கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது வடக்கு வீதி பகுதியில் இருவரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் 2 பேரையும் வழிமறித்து நகைகளை கழட்டி தருமாறு மிரட்டினர். இதற்கு அவர்கள் மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் தான் வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து தாய், மகள் இருவரையும் நகையை தர மறுத்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். அப்போது அவர்கள் சத்தம் போட்டனர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியே நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் ஓடி வந்தனர். இதனை பார்த்த 3 பேரும் மஞ்சுவின் கையில் இருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், சதாசிவம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 வாலிபர்கள் வநத மோட்டார் சைக்கிளின் நம்பரை மஞ்சு போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.
அப்போது மன்னார்குடி தெப்பக்குளம் பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மன்னார்குடி மன்னை நகர் பகுதியை சேர்ந்த அருண் (22), மதுக்கூர் ரோட்டை சேர்ந்த ஜான்சன் (19), லெக்னாம்பேட்டையை சேர்ந்த அபாண்டன் (21) ஆகியோர் என்பதும், பட்டா கத்தியை காட்டி செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.