

சங்கராபுரம்:
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக சங்கராபுரம் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாபு, சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் தேவபாண்டலம் கிராமத்தில் தகவல் கிடைக்கப்பெற்ற வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு உரிய அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதேஊரில் பெட்டிக்கடை நடத்தி வரும் கந்தசாமி(வயது 62) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.