நாமக்கல் அருகே விவசாயி வீட்டில் நகைகள், கார் திருடிய 3 பேர் கைது

நாமக்கல் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை மற்றும் காரை திருடிச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள வள்ளிபுரத்தை சேர்ந்தவர் குமரவேல் (வயது 30). விவசாயி. இவர் கடந்த 12-ந் தேதி குடும்பத்துடன் அவரது விவசாய தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் வீட்டிற்குள் நிறுத்தப்பட்டு இருந்த கார் திருடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து குமரவேல் நல்லிப்பாளையம் போலீசில் புகார் செய்திருந்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குமரவேலின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் 3 பேர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவர்கள் மூவரும், வெவ்வேறு திசையில் பிரிந்து தப்பித்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த நிலையில் நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜ்குமார் (29) , சேலம் மாவட்டம் அயோத்தியபட்டணத்தை சேர்ந்த கெரின் (23) மற்றும் எடப்பாடியை சேர்ந்த சிவசக்தி (39) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 11 பவுன் நகைகளையும், காரையும் போலீசார் மீட்டனர். இவர்கள் மீது பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com