ராமநாதபுரத்தில் 24 பவுன் தங்க காசுகளுடன் நகை ஆசாரி மாயம்

ராமநாதபுரம் நகைகடையில் இருந்து விற்பனை செய்துவிட்டு வருவதாக கூறி 24 பவுன் தங்க காசுகளுடன் சென்ற நகை ஆசாரி மாயமானார்.
மாயம்
மாயம்
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தை சேர்ந்த வாசுதேவன் மகன் வெங்கடேஷ் (வயது41). இவர் ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் கடையில் நகைசெய்யும் ஆசாரியாக கடந்த பல ஆண்டுகளாக வேலைபார்த்து வருபவர் காட்டூரணியை சேர்ந்த தியாகராஜன் மகன் கோவிந்தன். இவர் தனக்கு தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு நகை விற்பனை செய்து கொடுப்பதாக கூறியுள்ளார்.

இவரின் பேச்சை நம்பி கடை உரிமையாளர் வெங்கடேஷ் அவர் கேட்டபடி 24 பவுன் எடையுள்ள 24 தங்க காசுகளை கொடுத்து விற்பனை செய்துதருமாறு கூறியுள்ளார். அதிக அளவிலான மதிப்புடைய தங்க காசுகள் என்பதால் கோவிந்தனுடன் கடையில் வேலைபார்க்கும் மற்றொரு நபரான ராமநாதபுரம் மதுரையார் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சீனிராஜன் என்பவரை உடன் அனுப்பி உள்ளார். இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றநிலையில் மதுரையார் தெருவில் வைத்து சீனிராஜனை இறக்கிவிட்டுதனக்கு தெரிந்தவரை பார்த்துவிட்டு வந்து மீண்டும் கூட்டி செல்வதாக கூறி கோவிந்தன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

நீண்டநேரமாகியும் கோவிந்தன் திரும்பாததால் இதுகுறித்து சீனிராஜன் நகைகடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அனைவரும் கோவிந்தனை தொடர்பு கொள்ள முயன்றும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் வெங்கடேஷ் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 24 பவுன் தங்க காசுகளுடன் மாயமான நகை ஆசாரி கோவிந்தனை தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com