

சென்னை:
சென்னையில் கடந்த சில நாட்களாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோர் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது முதலில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அண்ணா நகரில் கராத்தே வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பயிற்சியாளர் கெபிராஜ் என்பவரும் கைதானார்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் மீதும் பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த பள்ளியைச் சேர்ந்த முன்னாள் மாணவிகள் 22 பேர் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கமிட்டியில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அந்த கமிட்டியில் உள்ள 3 உறுப்பினர்களும் புகார் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளனர்.
அடுத்த கட்டமாக கேந்திரிய வித்யாலயா பள்ளியின் மண்டல அலுவலக அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒரு மாணவி அளித்துள்ள புகாரில் தனது பிறந்த நாள் அன்று சாக்லேட் கொடுக்க சென்றபோது ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.
இன்னொரு மாணவி அளித்துள்ள புகாரில் டியூசன் வகுப்பின்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர் தனது உடலில் கை வைத்து செக்ஸ் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டி இருக்கிறார்.
தனது நோட்டை ஆசிரியரிடம் காண்பித்த போது அவர் தவறாக நடந்து கொண்டதாக அந்த மாணவி புகாரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறும்போது, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கு முன்னர் ஆசிரியர் ராஜகோபாலன், கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ், தடகள பயிற்சியாளர் நாகராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. அதனை போன்று கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மாணவிகளின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.