

சேலம்:
சேலம் அருகே உள்ள ஜருகுமலை வனப்பகுதியில் அடிக்கடி முயல் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனக்காப்பாளர்கள் கோபிநாத், அசோக்குமார், விஜயகுமார், ராஜேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜருகுமலை காப்புக்காடு அடிக்கரை சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பனமரத்துப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 25), ரமேஷ் (28) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் வனப்பகுதியில் முயல் வேட்டையாட செல்வதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை அவர்கள் செலுத்தியவுடன், அவர்களை வனத்துறையினர் எச்சரித்து விடுவித்தனர்.