

வானூர்:
விழுப்புரம் அருகே வானூர் போலீஸ் சரகம் கரசானூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 30) கார் டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மைனர் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இந்த திருமணத்தை இன்று (புதன்கிழமை) இரு வீட்டார்களும் நடத்த முடிவு செய்தனர். இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை தடபுடலாக செய்து வந்தனர். இதுதொடர்பாக விழுப்புரம் சைல்டு ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் மணமக்கள் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது மணப்பெண்ணுக்கு 18 வயது நிரம்பாமல் திருமணம் செய்வது சட்டபடி குற்றம், அதையும் மீறி திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.
இதையடுத்து இரு வீட்டாரும் திருமணத்தை நிறுத்துவதற்கு சம்மதம் தெரிவித்தனர். இருப்பினும் சமூக நலத்துறை ஆலோசகர் பத்மாவதி, விமலா ஆகியோர் மைனர் பெண்ணை விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தால் திருமணத்துக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.